சென்னையில் கடந்த 5ஆம் தேதி கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டது. இதனால் அங்கு வழக்கறிஞர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கூடியதால் பரபரப்பான சூழல் நிலவியது.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கைகள் வெளியிட்டனர். இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலையாளிகளாக சரணடைந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைதாகியுள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் உடற் கூறு ஆய்வுக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து அவரது நினைவிடத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரைப் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்-ன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ராங்கின் இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த அவரது படத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு ஆறுதல் தெரிவித்த ஸ்டாலின், உறவினர்களிடம் சிறிது நேரம் உரையாடினார்.
Read More : ”தவெக தலைவர் விஜய்க்கு எப்போது என்னுடைய ஆதரவு இருக்கும்”..!! பிரபல நடிகை ஓபன் டாக்..!!