முதலமைச்சர் ஸ்டாலின் படிப்படியாக முன்னேறி உள்ளார் என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளையொட்டி, ‘எங்கள் முதல்வா் எங்கள் பெருமை’ என்ற பெயரில் சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த புகைப்படக் கண்காட்சியை, அமைச்சர் சேகர் பாபு முன்னிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கடந்த 28ம் தேதி திறந்து வைத்தாா். இந்த கண்காட்சி, மாா்ச் 12-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
திமுக தொண்டா், பொதுக்குழு உறுப்பினா் (1978), இளைஞரணிச் செயலா் (1982), சட்டப்பேரவை உறுப்பினா் (1989), சென்னை மாநகர மேயா் (1996), திமுக பொருளாளா் (2015), திமுக தலைவா் (2018), தமிழக முதலமைச்சர்வா் (2021) என ஒரே ஃபிரேமில் அமைக்கப்பட்ட 8 புகைப்படங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.. மேலும் முதல்வா் மு.க.ஸ்டாலின் இளமைக் காலம் முதல் தற்போது வரையிலான முகத்தோற்றங்கள் கொண்ட புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் கவனம் பெற்றுள்ளன..
தினமும், பள்ளி மாணவா்கள், பொதுமக்கள், திமுகவினா் என ஆயிரக்கணக்கானோா் இந்த புகைப்பட கண்காட்சியை பாா்வையிட்டு வருகின்றனா். அந்த வகையில் இதுவரை 35,000 பேர் இந்த கண்காட்சியை பார்வையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இந்நிலையில், ‘எங்கள் முதல்வா் எங்கள் பெருமை’ புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் இன்று பார்வையிட்டார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “ முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வாழ்க்கை பயணம், அரசியல் பயணம் இரண்டும் ஒன்றுதான். அவர் படிப்படியாக முன்னேறி உள்ளார். அவரின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான் முதலமைச்சர் பதவி. அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்..” என்று தெரிவித்தார்.