அரசு தொடக்க பள்ளிகளில் செயல்படுத்தப்படும், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் வரும் கல்வியாண்டில் 30,122 பள்ளிகளில் விரிவுபடுத்தப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிபடுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலமாக 1.14 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவார்கள். காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சூடான, சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. உப்புமா, கோதுமை ரவா, வெண்பொங்கல், கிச்சடி உள்ளிட்டவை இந்த காலை சிற்றுண்டி திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
அண்மையில் ‘முதலமைச்சரின் காலை சிற்றுண்டி’ திட்டத்தின் செயல்பாடுகள் பற்றியும், வரும் கல்வி ஆண்டில் அதனை அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்துவதற்கான பணிகளை தீர்மானிக்கவும், முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், திட்டத்தை விரிவுபடுத்தவதற்கான பணிகளைத் தீவிரப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் கல்வியாண்டு முதல் 30,122 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளது.
அதற்கு ஏதுவாக காலை சிற்றுண்டி தயாரிக்க ஏதுவான இடங்கள் மற்றும் திட்டத்தை செயல்படுத்தும் சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றை உடனடியாக தேர்வு செய்ய ஒவ்வொரு ஊராட்சியிலும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.