ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாடு அரசின் நிறுவனமான ஆவின் நிறுவனத்திலேயே குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தி.மு.க. அரசின் இந்தச் செயல் வேலியே பயிரை மேய்வதுபோல் உள்ளது. அரசின் இந்த சட்டவிரோதமான செயல் கடும் கண்டனத்திற்குரியது. தனியார் நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய அரசே குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால், தனியார் நிறுவனங்களில் நிலவும் நிலைமையை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஹரிஓம் என்கிற ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு இரண்டு மாத கால ஊதியம் அளிக்கப்படவில்லை என்றும், இதனை வலியுறுத்தி ஆவின் பால் பண்ணை நுழைவு வாயிலில் அவர்கள் போராட்டம் நடத்தி வருவதாகவும் செய்திகள் வருகின்றன. முதலமைச்சர் ஸ்டாலின் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.