அசாமில் குழந்தை திருமணம் செய்தது தொடர்பாக கடந்த 3 நாட்களில் 2 ஆயிரத்து 500 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அசாமில் சராசரியாக 31 சதவிகித பெண் குழந்தைகள், 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுவதாகவும், 15 வயது முதல் 19 வயது வரையிலான பெண்களில் 11.7 சதவீதம் பேர் கருவுருகின்றனர் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், குழந்தைத் திருமணம் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆலோசனை நடத்தினார். அப்போது, குழந்தைத் திருமணம் புரிவோர், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு, காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், 2026 ஆம் ஆண்டுக்குள் அசாமில் குழந்தைத் திருமணத்தை முற்றிலும் ஒழிக்கத் திட்டமிட்டுள்ளதாக அம்மாநில அரசு அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது.
குழந்தைத் திருமணம் செய்த ஆண்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் 14 வயதிற்கும் குறைவான சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் அம்மாநில முதல்வர் எச்சரிக்கைவிடுத்திருந்தார். அதன்படி, 18 வயதிற்கு உள்பட்ட சிறுமிகளை திருமணம் செய்த 2, 258 பேரை போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். மேலும், குழந்தை திருமணம் தொடர்பாக 4,074 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளன. இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென பெண்கள் சிலர் காவல் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குழந்தை திருமணங்கள் அனைத்தும் சட்டவிரோதமானது என அறிவிக்கப்படும் என்று அசாம் அரசு அறிவித்துள்ள நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும் குழந்தை திருமண விவகாரத்தில் 2, 500 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.