திருச்சி அருகே மாற்றுத் திறனாளிகளான இரண்டு சிறுவர்கள், தந்தையை இழந்து தாய் மற்றும் சகோதரியுடன் அவதிப்பட்டு வருகின்றனர். தங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. எலக்ட்ரீசனாக பணியாற்றி வந்த கருப்பையாவிற்கு சரஸ்வதி, நாகலெட்சுமி என இரு மனைவிகள். முதல் மனைவி சரஸ்வதிக்கு நாகதேவி என்ற மகளும், 17 வயதில் மணிகண்டன், 16 வயதில் நந்தகுமார் என்ற மகன்களும் உள்ளனர். அடுத்தத்தடுத்து ஓராண்டு இடைவெளியில் பிறக்கும்போது இயல்பான நிலைகளில் இருந்த மணிகண்டன், நந்தகுமார் இருவரும் 2 வயது நிரம்பும் நிலையில், இனம் தெரியாத நோயினால் பாதிக்கப்பட்டு நடக்கும் திறனை இழந்துள்ளனர்.

கை, கால்களில் வளர்ச்சி நின்று போனது. மேலும் அவர்களின் எலும்புகள் அவ்வப்போது நொறுங்கி விடுகிறது. இதைக்கூட அறிந்திடாத சிறுவர்கள் கை, கால் வீக்கம் வந்து வலி ஏற்பட்ட பின்பே தாயிடம் இதைப்பற்றி தெரிவித்துள்ளனர். வைத்திய முறையில் பல ஆண்டுகளாக போராடி, எந்தவித முன்னேற்றமும் இன்றி இனம் தெரியாத நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் மணிகண்டன், நந்தகுமார் தற்போது, படுத்தப்படுகையாக முழுமையாக மாற்றுத்திறனாளிகளாக உருமாறியுள்ளனர்.
கால்சியம் பற்றாகுறையால் பாதிக்கப்பட்டிருக்கலாம், தைராய்டு நோய்கள் இருக்கலாம் என மருத்துவ ஆலோசனைகள் கேட்கப்பட்டாலும் அவற்றுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்த குடும்பத்தை வறுமை விட்டு வைக்கவில்லை. ஏற்கனவே குறைந்த வருவாயில் குடும்பத்தையும், மகன்களையும், அவர்களது வைத்திய செலவையும் போராடி காப்பற்றி வந்த கருப்பையா, கடந்த ஜூன் மாதம் வீட்டின் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். தற்போது வீட்டில் மூன்று பெண்களும், மாற்றுத்திறனாளிகளாக மாறி படுத்தப்படுகையாக உள்ளனர்.
சிறுவர்களின் தேவைகள் அனைத்தையும் சகோதரி நாகதேவியும், தாய் சரஸ்வதியுமே செய்து வருகின்றனர். இவர்களை விட்டு விட்டு அவர்கள் வெளியே எங்கும் போக முடியாத நிலை உள்ளது. தற்போது சிறுவர்களுக்கு அரசின் சார்பின் வழங்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிக்கான உதவி தொகையே குடும்பத்தில் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. எனவே மருத்துவ செலவை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.