அருணாச்சல பிரதேசத்தை இணைத்து புதிய வரைபடம் வெளியிட்டுள்ள நிலையில், சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், “சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த பிரதமர் மோடிக்குத் தைரியம் இருக்கிறதா என்று சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை தங்கள் நாட்டுக்குச் சொந்தமானது என சீனா கூறிவருகிறது. அப்பகுதியை தெற்கு திபெத் என்று சீனா கூறுகிறது. அதற்கு இந்தியா தரப்பில் பலமுறை கண்டனம் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது சீனா சர்ச்சைக்குரிய வகையில் புதிய வரைபடம் ஒன்றை அதிகாரபூர்வமாக நேற்று வெளியிட்டுள்ளது. அதில் வழக்கம் போல, ஆக்கிரமிப்பில் வைத்து இருக்கும் இந்தியப் பகுதிகளை அக்ஷயா சின் என குறிப்பிட்டிருக்கிறது. அத்துடன் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை, தெற்கு திபெத் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்திய நிலப் பகுதிகளை மட்டுமல்ல பல்வேறு நாடுகளின் எல்லைப் பகுதிகளையும் கூட சீனா தம்முடைய பிரதேசம் என இந்த வரைபடத்தில் உரிமை கோரி இருக்கிறது. தைவானையும் தனது நிலப் பகுதியாக சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பிரதமர் மோடி சமீபத்தில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்குச் சென்று சீனப் பிரதமரைச் சந்தித்தார். தற்போது இந்த வரைபடம் வெளிவந்துள்ளது. எனவே, இந்த கேள்வியை அவரிடம் கேட்க வேண்டும். அது எப்படி தெரிகிறது? அது நம் இதயத்தை உடைக்கிறது. லடாக்கில் சீனா அத்துமீறி நுழைந்துள்ளது என்று ராகுல் காந்தி கூறியது உண்மைதான். நமது நிலத்தை சீனா தின்று விட்டது. அருணாச்சல பிரதேசத்திலும் நுழைய சீனா முயற்சிக்கிறது. உங்களுக்கு தைரியம் இருந்தால் சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்யுங்கள்” என்று கூறினார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு புல்வாமா தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் குறிப்பிட்டதுபோல, இந்த தேர்தலிலும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற பெயரில் போலியான நாடகத்தை அரங்கேற்றி எத்தனை உயிர்கள் பறிபோகுமோ என மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தலுக்கு முன்னதாக கலவரம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ராமர் கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் பக்தர்கள் ரயில்மீது கற்களோ, வெடிகுண்டுகளோ வீசப்படலாம். இந்த அச்சம் முக்கிய அரசியல் கட்சிகளின் மனதிலும் இருக்கிறது. எல்லாவற்றையும் மக்கள் முன்னிலையில் வைப்பது எங்கள் வேலை. இது போன்ற சம்பவங்களைத் தடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. ஹரியானாவில் நடந்த அல்லது நடத்தப்பட்ட கலவரம் இதற்கு ஓர் உதாரணம்” என்று ராவுத் கூறினார்.