இந்தியாவின் சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே புதிய தேசிய நெடுஞ்சாலையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ம் ஆண்டில் இந்திய – சீன ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதலை தொடர்ந்து, கிழக்கு லடாக்கில் இருநாட்டு ராணுவமும் வீரர்களையும், போர் தளவாடங்களையும் குவித்து போருக்கு தயார்நிலையில் இருக்கின்றன. இதன் காரணமாக, பதற்றம் நிலவுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக இருநாட்டு ராணுவ மட்டத்தில் இதுவரையில் 16 சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
இதனிடையே சீன ராணுவம் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, இந்திய எல்லைக்கு அருகில் உள்ள சரச்சைக்குரிய பகுதிகளில் சாலைகள் அமைத்தல், ராணுவ கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், பாலங்கள் அமைத்தல் போன்ற அத்துமீறல் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பான்காங் ஏரி பகுதியில் 2 பெரிய பாலங்களை அது அமைத்து வருகிறது.
இந்நிலையில், சிக்கிம், அருணாச்சல மாநிலங்களின் எல்லையை ஒட்டிய எல்லை கட்டுப்பாட்டு எல்லைக்கு மிக அருகில் புதியதாக நீண்ட தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தை சீனா அமல்படுத்த உள்ளது. சீனாவில் உள்ள ஜின்ஜியாங் பிராந்தியத்தில் திபெத்தில் உள்ள லுன்சே மாவட்டத்தில் இருந்து கஷ்கரில் உள்ள மஸா என்ற இடம் வரையில் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. சிக்கம் மாநிலம், நேபாளம், ஆகியவை வழியாகவும் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சீனாவின் இந்த நடவடிக்கையால் இரு நாடுகளின் எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது..