வங்கக்கடலில் உருவான சித்ரங் புயல், 90 கிலோமீட்டர் சூறாவளிக் காற்றுடன் கரையைக் கடந்தது. இதில், 5 பேர் உயிரிழந்தனர்.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதி தீவிர புயலாக வலுபெற்றது. சித்ரங் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல், படிப்படியாக வடக்கு வடகிழக்கு நோக்கி நகர்ந்து வந்தது. புயல் காரணமாக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுகொண்டார். இதேபோல், பல்வேறு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், வங்கதேசத்தில் டிங்கோனா மற்றும் சாண்ட்விப் இடையே பரிசால் பகுதிக்கு அருகில் இந்திய நேரப்படி நேற்றிரவு 9.30 மணிமுதல் 11.30 மணிக்குள் சித்ரங் புயல் கரையைக் கடந்தது.
அப்போது, மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் லட்சக்கணக்கானோர் தங்கவைக்கப்பட்டனர். நரைல் மாவட்டத்தில் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். பர்குனா, நரைல் மாவட்டங்களிலும், போலா தீவிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதன்படி, 5 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயல் காரணமாக இன்றும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.