உலகின் முன்னணி டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் டெக் நிறுவனங்களில் ஒன்றான சிஸ்கோ, தனது வர்த்தகத்தையும், நிதி நிலையையும் மறுசீரமைப்பு செய்யும் வகையில் தனது மொத்த ஊழியர்களில் 5 சதவீதம் பேர் அதாவது 4000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
தற்போது வெளியான தகவல்கள் படி சிஸ்கோ தனது உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 83,000 ஊழியர்களை வைத்துள்ள நிலையில் 5 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதன் மூலம் சுமார் 4,100 பேர் தங்களது பணியை இழக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்தியாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் ஊழியர்களை அதிகம் கொண்டு இருக்கும் நிறுவனங்கள் பட்டியலில் சிஸ்கோ முக்கியமான இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், சிஸ்கோவின் பணிநீக்கம் டெக் ஊழியர்கள் மத்தியில் அடுத்த அதிர்ச்சி செய்தியாகவே உள்ளது. சிஸ்கோ நிறுவனம் 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 13.6 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும். தற்போது பொருளாதார மந்த நிலை காரணமாகவும், உலகளவில் ஏற்பட்டுள்ள வர்த்தகச் சரிவைக் காரணம் காட்டி தற்போது 4000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

நவம்பர் மாதத்தில் மட்டும் மெட்டா, அமேசான், ட்விட்டர் ஆகிய 3 நிறுவனங்கள் தனது உலகளாவிய வர்த்தகத்தில் இருக்கும் ஊழியர்களில் சுமார் 38,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.