சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயது பெண். இவர் வீட்டில் இருந்து கொண்டே அம்பத்தூரில் உள்ள ஐ.டி. கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு இவர், தனது நாய் குட்டியுடன் சாந்தோம் சர்ச் பின்புறம் உள்ள கடற்கரை மணற்பரப்பில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு மதுபோதையில் வந்த நபர் ஒருவர், அப்பெண்ணிடம் அவரது நாய் குட்டி குறித்து கேட்டுள்ளார். பின்னர் திடீரென அந்த நபர், அப்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனைப் பார்த்து ஓடிவந்த அப்பகுதி மக்கள், போதை ஆசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பெயர் சரவணன் (54) என்பதும், அவர் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இவர், கே.கே. நகரில் உள்ள மத்திய அரசு குடியிருப்பில் வசித்து வரும் நிலையில், தற்போது ராஜாஜி பவனில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 5 நாட்களாக விடுமுறையில் இருந்து வரும் சரவணன், நேற்று குடித்துவிட்டு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற போது பொதுமக்கள் சிக்கியது தெரியவந்தது. இதற்கிடையே, பொதுமக்கள் தாக்கியதில் லேசான காயமடைந்த சரவணனை போலீசார், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர். பின்னர், இச்சம்பவம் தொடர்பாக சரவணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.