Syria: சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அசாத்தின் ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இரண்டு நாட்களாக நடந்த மோதல்களில் பலியானோர் எண்ணிக்கை 1,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
சிரியாவில், 2011 முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அந்நாட்டின் முன்னாள் அதிபர் பஷார் அல்- ஆசாத், ரஷ்யா மற்றும் ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அமெரிக்கா, துருக்கி ஆகிய நாடுகள், அவருக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சி படைகளை துாண்டிவிட்டன. ரஷ்ய ராணுவம் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளதால், சிரியாவுக்கு அவர்களால் உதவ முடியவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி துருக்கி ஆதரவுடன் புதிதாக உருவான கிளர்ச்சிப்படை முழுவீச்சில் தாக்குதலில் இறங்கியது. தலைநகர் டமாஸ்கஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றியது.
இதனால் அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவுக்கு சென்று தஞ்சமடைந்தார். கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த அஹ்மத் அல்-ஷரா, சிரியாவின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ளார். ஆனால், சிரியாவின் கடலோர நகரங்கள் இன்னும் ஆசாத் விசுவாசிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்கு அரசு படையினருக்கும், ஆசாதின் விசுவாசிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பல கிராமங்களில் புகுந்து அரசு படையினர் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு ஆயுதம் ஏந்திய ஆசாத் விசுவாசிகள் பதிலடி தந்தனர். இந்த சண்டையில், கடந்த 2 நாட்களில் பலியானோர் எண்ணிக்கை 1000ஆக அதிகரித்துள்ளது.
இதில், 745 பொதுமக்கள், 125 அரசு பாதுகாப்புப் படையினர், பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் பஷார் அசாத்துடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த 148 போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கடலோர நகரமான லடாகியாவைச் சுற்றியுள்ள பெரிய பகுதிகளில் குடிநீர் துண்டிக்கப்பட்டது, மேலும் பல பேக்கரிகள் மூடப்பட்டதாக போர் கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Readmore: ஆஹா!. “ஜிஎஸ்டி வரி மேலும் குறைக்கப்படும்”!. நிர்மலா சீதாராமன் சொன்ன குட்நியூஸ்!.