கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்திலும், அதற்கு வெளியே சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை மண்டல போக்குவரத்து மையமாக (Regional Mobility Hub) மாற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 6 அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் 9 அதிகாரிகள் என மொத்தம் 16 பேருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்; பொதுபோக்குவரத்து வசதிகளை அதிகமாக்குதல், பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுத்தல், அனைத்து பிரிவினருக்கும் மேம்பட்ட பயணத்தை அளித்தல், மக்களின் செலவுகளை குறைத்தல், நெரிசலையும் மாசுபாட்டையும் குறைத்தல், உடல்நலத்தை மேம்படுத்துதல், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பலவிதமான பலன்களை Mobility Hub அளிக்கிறது.
தனியார் கார் பயன்பாட்டை குறைத்து – பேருந்து, தொடர்வண்டி, வாடகை வாகனங்கள் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து மற்றும் ஒன்றுக்கு மேற்பட்டோர் பகிரும் போக்குவரத்து முறைகளை ஊக்குவிக்க இது பயன்படுகிறது. மேலும், மிதிவண்டி போக்குவரத்துக்கும், நடைபயணத்துக்கும் வழிவகுப்பதால் இது மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தை உருவாக்கி தொற்றாநோய் (NCDs) அதிகரிப்பை தடுத்து உடல்நலத்தை மேம்படுத்துகிறது.
பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவும் காற்று மாசுபாட்டை தடுக்கவும் இது பயன்படுகிறது. மாநகரங்களை ஒரு பெருமிதமான பகுதியாக மாற்றவும் மக்களிடையே சமுதாய உணர்வை மேம்படுத்தவும் Mobility Hub வழி செய்கிறது. நவீனமான முறையில் Mobility Hub கட்டமைப்புகளை உருவாக்கும் நடைமுறை தற்போது உலகமெங்கும் பல்வேறு மாநகரங்களில் புகழ்பெற்று வருகிறது. இந்தியாவில் கொச்சி நகரில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
Mobility Hub கட்டமைப்பு முறைகள் நவீனமானவை ஆகும். கடந்த 15 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நகரங்களில் அந்தந்தப் பகுதிகளின் தேவைக்கு ஏற்ப செயலாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் சூழலில் பொதுவாக பின்வரும் கட்டமைப்புகளைக் கொண்டு Mobility Hub உருவாக்கப்பட வேண்டும். வெளியூரில் இருந்து வரும் பேருந்துகளுக்கும் – மாநகர பேருந்துகளுக்கும் இடையே முழுமையான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும் உடனுக்குடன் MTC பேருந்து இணைப்பு கிடைக்க வேண்டும்.
தொடர்வண்டி, மெட்ரோ இணைப்பு எளிதாகவும் உடனுக்குடனும் கிடைக்க வேண்டும். ஆட்டோ, வாடகை கார் இணைப்பு எளிதாகவும் நியாயமான கட்டணத்திலும் கிடைக்க வேண்டும். மேற்கண்ட அனைத்து போக்குவரத்து வசதிகளுக்கும் பயணிகள் எளிதாக செல்வதற்கு இணைப்பு வசதிகள் இருக்க வேண்டும். தடையற்ற வழிகள், நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி வசதிகள், நடை மேம்பாலம், சுரங்கப்பாதை உள்ளிட்ட வசதிகள் வேண்டும்.
மேற்கண்டவாறு, Regional Mobility Hub போக்குவரத்து நிலையத்தில் இருக்க வேண்டிய வசதிகளில் பெரும்பாலானவை கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இல்லை. இதனை மாற்றி ஒரு முழுமையான Regional Mobility Hub ஆக கிளாம்பாக்கத்தை மேம்படுத்த வேண்டும். உடனடியாக 300 முதல் 500 புதிய MTC பேருந்துகளை கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை மாநகர் மற்றும் புறநகரப் பகுதிகளுக்கு இயக்க வேண்டும்.கிளாம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தை உடனடியாக அமைத்து, நகர்ப்புற தொடர்வண்டிகள் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டும்.
வெளியூர் செல்லும் தொடர்வண்டிகள் நின்று செல்லும் நிலையமாகவும் இது அமைய வேண்டும். (மேலும், வேளச்சேரி – பரங்கிமலை MRTS பறக்கும் இரயில்திட்டத்தில், கடந்த 17 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் 500 மீட்டர் இணைப்பை கட்டி முடித்து, உடனடியாக தொடர்வண்டிகளை இயக்க வேண்டும். கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் – இனி அமைக்கப்பட இருக்கும் தனியார் புறநகர் பேருந்து நிலையம் இரண்டுக்கும் இடையே கட்டணமில்லா பேருந்து இணைப்பை உருவாக்க வேண்டும்.
சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் இடையே உடனடியாக மெட்ரோ இணைப்பை ஏற்படுத்த வேண்டும். கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை Regional Mobility Hub ஆக மாற்றும் திட்டத்தை உடனடியாக வகுத்து செயல்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.