Indian Soldiers: காஷ்மீர் குப்வாராவில் காவல்நிலையத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய இந்திய ராணுவ வீரர்கள் 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் கடந்த செவ்வாய் கிழமை அன்று போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ராணுவ வீரர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராணுவ வீரர்கள் காவல்நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து காவலர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், 4 காவலர்கள் காயமடைந்துள்ளனர். காவல்நிலையத்திற்குள் ராணுவ வீரர்கள் புகுந்து காவலர்களை தாக்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும், காயமடைந்த காவலர்களிடம் செல்போனை பறித்துக்கொண்டதாகவும், காவலர் ஒருவரை கடத்தி சென்றதாகவும் ராணுவ வீரர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக 3 லெப்டினன்ட் கர்னல் உட்பட 16 ராணுவ வீரர்கள் மீது கடத்தல், கொலை, கலவரம் ஆகிய பிரிவுகளின் கீழ் காஷ்மீர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறை அதிகாரிகளை ராணுவ வீரர்கள் தாக்கியதாக வெளிவரும் தகவல்கள் தவறானவை என்றும் காவல்துறையினருக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட சிறு பிரச்சனை இப்போது பேசி தீர்க்கபட்டுள்ளது என்று இந்திய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.