42 வயது ஆண் மற்றும் 10ஆம் வகுப்பு மாணவி திடீரென மாயமான நிலையில், இருவரும் காட்டுப் பகுதிக்குள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பைவளிகே பகுதியைச் சேர்ந்த பிரதீப் (42) என்பவர் ஆட்டோ ஓட்டுநராக வேலைபார்த்து வந்த நிலையில், இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், பிரதீப் தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 10ஆம் வகுப்பு மாணவியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்பதால், குடும்பத்தினருக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.
இந்நிலையில் தான், கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி மாணவி திடீரென மாயமாகியுள்ளார். இதையடுத்து, அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது, ஆரம்பத்தில் கால் சென்ற நிலையில், சிறிது நேரத்திலேயே சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது. அதேசமயம், ஆட்டோ ஓட்டுநர் பிரதீப்பும் காணாமல் போயுள்ளார். மேலும், அடுத்த சில நாட்களில், மாணவி தனது உறவினருக்கு அனுப்பிய புகைப்படங்களில் பிரதீப்புடன் மிக நெருக்கமாக இருக்கும் படங்கள் இருந்துள்ளன.
இதனால், மாணவி பிரதீப்புடன் சென்றிருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, காவல்நிலையத்தில் மாணவி மாயமானது குறித்து புகாரளித்தனர். மேலும், நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் பிரதீப் மற்றும் மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, அவர்களது செல்போன் எந்த பகுதியில் இருக்கிறது என ஆய்வு செய்தபோது, செல்போன் சிக்னல் ஒரு காட்டுப் பகுதிக்குள் காட்டியுள்ளது.
இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், இருவரையும் தீவிரமாக தேடினர். அப்போது மாணவி மற்றும் பிரதீப் இருவரும் மரத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், சடலமாக கிடந்தனர். மேலும், சம்பவ இடத்தில் இருவரின் செல்போன்கள், கத்தி மற்றும் சாக்லேட் ஆகியவை இருந்துள்ளது. இதையடுத்து, இருவரின் சடலத்தையும் கைப்பற்றிய போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.