கல்லூரி வளாகத்தில் மாணவியை வாலிபர் ஒருவர், சரமாரியாகக் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரிசிடன்சி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு லயஸ்மிதா என்ற மாணவி பி.டெக் படித்து வந்துள்ளார். மாணவியைப் பார்ப்பதற்காக நேற்று மதியம் அவரின் கல்லூரிக்குப் பவன் கல்யாண் என்ற வாலிபர் வந்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென்று அந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். பிறகு, அடுத்த நிமிடமே பவன் கல்யாண், தன்னைத் தானே குத்திக் கொண்டுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கல்லூரியின் காவலாளிகள், ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். மேலும், பவன் கல்யாண் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கல்லூரி மாணவியும், அவரை கத்தியால் குத்திய வாலிபரும் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இருவருக்கும் பல வருடங்களாகப் பழக்கம் உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்களா? அல்லது வாலிபரின் காதலனை மாணவி ஏற்க மறுத்ததால் கொலை செய்தாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.