நீடித்த நுகர்வு வாயிலாக சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை இயக்கத்தை வலியுறுத்தும் விதமாக, பழுதுபார்க்கும் உரிமைக்கான ஒட்டுமொத்த நடைமுறையை உருவாக்குவதற்கான முக்கியமான நடவடிக்கையை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை மேற்கொண்டுள்ளது.
உள்ளூர் சந்தையில் நுகர்வோர் மற்றும் பொருட்கள் வாங்குவோருக்கு அதிகாரமளித்து, அசல் சாதன உற்பத்தியாளர்கள், மூன்றாம் நபர் வாங்குவோர் மற்றும் வியாபாரிகள் இடையே, இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே பழுதுபார்க்கும் உரிமைக்கான நடைமுறை உருவாக்கப்படுகிறது. மேலும் பொருட்களின் நீடித்த நுகர்வோர் மற்றும் மின்னணு கழிவுகளை குறைப்பதையும் இது வலியுறுத்துகிறது. இந்த நடைமுறை, இந்தியாவில் செயல்பாட்டுக்கு வரும்போது, பொருட்களின் நிலைத்தன்மை மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு கிரியா ஊக்கியாக அமைந்து, நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமையும். தற்சார்பு இந்தியா வாயிலாக, மூன்றாம் நபர் பழுதுபார்ப்பவர்களை அனுமதிக்கவும் இந்த நடைமுறை வகை செய்யும்.
மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் திருமதி நிதி கரே தலைமையிலான இந்த குழுவின் முதல் கூட்டத்தில், பழுதுபார்க்கும் உரிமையை செயல்படுத்த, வேளாண் கருவிகள், செல்போன்கள் அல்லது டேப்லட்டுகள், நுகர்வோர் பயன்பாட்டு பொருட்கள் மற்றும் வாகனங்கள் அல்லது வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த பழுதுபார்க்கும் உரிமை, பொருட்களை மூன்றாம் நபர் அல்லது சுயமாக பழுதுபார்க்க அனுமதிப்பதன் வாயிலாக, தற்சார்பு இந்தியா மூலம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.