தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒவ்வொரு காய்கறியின் விலையும் புதிய உச்சத்தை நோக்கி நகர்கிறது. காய்கறிகளின் விலை உயர்வு என்பது, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை அசைத்து பார்த்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு வாங்கிய காய்கறிகளை, தற்போது 2 மடங்குக்கும் கூடுதலான விலையை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சின்ன வெங்காயம், தக்காளி, பீன்ஸ், பூண்டு, கேரட், பச்சை மிளகாய், இஞ்சி, அவரைக்காய், கருணை கிழங்கு, கத்தரிக்காய், நூக்கல், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்துவிட்டது. இதேபோல், சுரைக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பீட்ரூட், கொத்தவரை உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளன. வெங்காயம், புடலங்காய், உருளை கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலையில் மட்டும் மாற்றம் இல்லாமல் தொடர்கிறது. 2 வாரங்களுக்கு முன்பு 35 ரூபாய்-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி, தற்போது ரூ.80-க்கு விற்பனையாகிறது.
இதேபோல், ஒரு கிலோ பீன்ஸ் ரூ.100-ல் இருந்து ரூ.120, பூண்டு ரூ.140-ல் இருந்து ரூ.160, இஞ்சி ரூ.200-ல் இருந்து ரூ.240, அவரைக்காய் ரூ.80-ல் இருந்து ரூ.100, கத்தரிக்காய் ரூ.60-ல் இருந்து ரூ.80, நூக்கல் ரூ.60-ல் இருந்து ரூ.70, சின்ன வெங்காயம் ரூ.60-ல் இருந்து ரூ.100, பச்சை மிளகாய் ரூ.80-ல் இருந்து ரூ.100 என விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், இதர காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளன.
காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், குறிப்பாக சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியின் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மழையால் விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு என கூறி காய்கறிகளின் விலையை வியாபாரிகள் உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, விலை உயர்த்தப்பட்டுள்ள காய்கறிகளை கொள்முதல் செய்து நியாய விலை கடைகள் மூலமாகவும், வேளாண்மை துறை சார்பில் நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலமாக மக்களுக்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனிடையே, பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் தக்காளி ஒரு கிலோ ரூ.60 க்கு விற்பனை செய்யப்பட்டு அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.