திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக ஆர். மகேஸ்வரி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் திண்டுக்கல் ஆர்.எம்.காலணியில் இருக்கின்ற அவருடைய வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் அவருடைய வீட்டுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அவர் கடந்த 2020- 21 ஆம் வருடத்தில் காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக பணியாற்றினார் அப்பொழுது நோய் தொற்று பரவல் தடுப்பு சுகாதாரப் பணிகளுக்காக பொருட்கள் வாங்கியதில் 32 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுடர்மனி லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கு குறித்து நேற்று மகேஸ்வரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. நேற்று காலை 7 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை மாலை 4 மணி வரையில் நடைபெற்றது.
திண்டுக்கல் பகுதியில் நடைபெற்ற சோதனையின் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டம் களக்காடு துப்புரவு ஆய்வாளர் ரமேஷ் குமார் வீட்டிலும் திருக்காளி மேட்டில் இளநிலை உதவியாளராக இருந்த சந்தைவெளி என்ற ஊழியர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தியது.