கனியாமூர் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரிய புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தற்போது வழக்காக பதிவு செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூர் தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த மாதம் 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகளின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், மாணவி உயிரிழந்து 3 நாட்களாகியும் போலீசார் மௌனம் சாதித்து வந்தனர். இதனால், ஏராளமான இளைஞர்கள் பொதுமக்கள் திரண்டு பள்ளியை தாக்கி அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 300க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் பள்ளி மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்குகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் கட்டடங்களில் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரிய புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தற்போது வழக்காக பதிவு செய்துள்ளது.