மணிப்பூர் மாநிலத்தில் இரு குழுக்கள் இடையேயான மோதலால் கடந்த இரண்டு மாதங்களாக பதற்றம் நீடித்து வருகிறது. இதனால், அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மணிப்பூரின் கிழக்கு பகுதியில் உள்ள இதம் பகுதியில் கங்லேய் யாவோல் கன்னா லுப் (KYKL) மெய்தி போராளிகள் குழு நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த பயங்கரவாத குழுதான் 2015ஆம் ஆண்டு டோக்ரா யூனிட்டிற்கு எதிராக தாக்குதல் நடத்தியது. மேலும், பல தாக்குதல்களை இந்த குழு நடத்தியுள்ளது. ராணுவத்தினருக்கு இந்த குழுவினர் பதுங்கியிருக்கும் தகவல் ரகசியமாக கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக இதம் கிராமப்பகுதிக்கு சென்ற ராணுவம் அவர்களை கைது செய்ய முயற்சித்தது. அங்கு 12 பேரை ஆயுதங்களுடன் பிடித்தது.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் ராணுவத்தினரை சூழ்ந்து கொண்டு ராணுவம் தனது நடவடிக்கையை மேற்கொள்ள விடாமல் தடுத்தனர். ராணுவம் எவ்வளவோ எடுத்து கூறியும் அந்த கும்பல் கேட்கவில்லை. 1,500க்கும் மேற்பட்டோர் திரண்டு ராணுவத்தை சுற்றி வளைத்தனர். இதனால், சூழ்நிலையை உணர்ந்த ராணுவம் சேதம் எதுவும் ஏற்படக்கூடாது என்பதால் போராளிகள் குழுவினரை சேர்ந்த 12 பேரை விடுவித்ததோடு, அவர்களுக்கு எதிரான நடவடிக்கையையும் கைவிட்டுள்ளனர்.