காங்கிரஸ் கட்சி தமிழகத்திற்கு பல விதங்களில் துரோகத்தை செய்துள்ளது என வைகோ விமர்சனம் செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் வரும் 19 அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக தேர்தல் களத்தில் கச்சத்தீவு விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு தொடர்பான 1974 ஒப்பந்தம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆர்டிஐ தகவலுக்கு பிறகு இந்த விவகாரம் மீண்டும் பேசு பொருளாக மாறி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, கச்சத்தீவு தொடர்பாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘‘கச்சத்தீவை மீட்போம் என இன்று கூறிவரும் பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்…? என கேள்வி எழுப்பினார்.
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர் சந்திப்பில்; தமிழக முதல்வர் எனக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார். தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நான் 21 முறை கச்சத்தீவு தொடர்பாக பதில் அளித்துள்ளேன். இது திடீரென எழுந்த பிரச்சினை அல்ல. பல ஆண்டுகளாக உள்ள இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு நேரடி பிரச்சினை. சென்னையில் இருந்து கொண்டு பேசும் விஷயம் இது அல்ல என கரசாரமான பதிலை தெரிவித்து இருந்தார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது; இலங்கைக்கு 2 முறை பிரதமர் மோடி பயணம் செய்தார். அப்போது பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு பற்றி நினைவுக்கு வரவில்லையா?.. கூட்டாட்சி என்று பேசிக்கொண்டு இருக்கும் பாஜக காட்டாட்சி நடத்திகொண்டு இருக்கிறது. 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக போரிட்டு தான் கட்சத்தீவை மீட்க வேண்டும் என நீதிமன்றத்தில் கூறியது என்றார்.
கச்சத்தீவு விவகாரம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அதற்கு பதில் அளித்த அவர்; மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி தமிழகத்திற்கு பல விதங்களில் துரோகத்தை செய்துள்ளது என்று மறைமுகமாக தனது பதிலை தெரிவித்தார். கூட்டணி கட்சிகள் அங்கம் வகிக்கும் வைகோ அவர்கள் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.