செந்தில் பாலாஜியை சதியால் சிறையில் வைத்திருந்தாலும், அவரால் உருவாக்கப்பட்ட செயல் வீரர்கள் களத்தில் வேகமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் கூறியுள்ளர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாதேஸ்வரன், ஈரோடு தொகுதி வேட்பாளர் பிரகாஷ், கரூர் தொகுதி வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரை அறிமுகப்படுத்தி முதலமைச்சர் முக.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “கடந்த 5 ஆண்டுகளில், ED, IT, CBI இப்படிப்பட்ட மத்திய அரசின் அமைப்புகளை பாஜகவின் கைப்பாவையாக மாற்றி, அவர்களை ரெய்டுக்கு அனுப்புவது, பிறகு பாஜகவுக்கு நிதியாகத் தேர்தல் பத்திரங்களை வாங்குவது என்று 8,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறார்கள். வரலாற்றிலேயே இப்படி ஒரு வசூல் நடந்ததில்லை. இந்த ஊழல் வெளி வந்ததால், பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம் அப்பட்டமாகத் தெரிகிறது. தேர்தல் நெருங்க நெருங்க, தோல்வி பயத்தில் செய்யக் கூடாததை எல்லாம் செய்கிறார்.
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை கைது செய்தார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வெளியில் இருந்து வலிமையாகத் தேர்தல் பணியாற்றுவார்கள் என்று பயந்து நடுங்கிக் கைது செய்திருக்கிறார்கள். இங்கு தமிழகத்திலும் மேற்கு மண்டலத்தின் வலிமையான செயல்வீரர் செந்தில் பாலாஜியையும் இதே மாதிரிதான் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஜாமீன் கூட கொடுக்காமல் பல மாதங்களாக அவரை சிறையில் வைத்திருக்கிறார்கள். மேற்கு மண்டலத்தில் அவரின் பணிகளை முடக்க வேண்டும் என்று இந்த சதிச் செயலைச் செய்தார்கள்.
பாஜகவின் அத்தனை சதிச் செயல்களையும் கடந்து, செந்தில் பாலாஜியால் உருவாக்கப்பட்ட செயல்வீரர்கள் களத்தில் வேகமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சுதந்திரமான புலனாய்வு அமைப்புகளைக் கூட்டணிக் கட்சிகள் போன்று மாற்றி எதிர்க்கட்சிகள் மேல் ஏவி விட்டிருக்கும் பாஜகவுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, இது இரண்டு பக்கமும் கூரான முனைகளைக் கொண்ட கத்தி என்பதை மறக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்” என்றார்.
Read More : கர்ப்பிணிகளுக்கு குட் நியூஸ்..!! இனி மூன்றே தவணைகளில் ரூ.14,000 நிதியுதவி..!! எப்போதெல்லாம் கிடைக்கும்..?