திருச்சியில் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே மர்ம நபர்கள் வைத்த டயர் மீது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் ரயிலின் 4 பெட்டிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தண்டவாளத்தில் லாரி டயர் வைத்த நபர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி லால்குடி அருகே மேலவாலாடி பகுதியில் நேற்றிரவு ரயில்வே தண்டவாளத்தில் பெரிய டயர் ஒன்றை மர்ம நபர்கள் வைத்துள்ளனர். சென்னை – கன்னியாகுமாரி சென்று கொண்டிருந்த கன்னியாகுமரி அதிவிரைவு ரயில், தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த டயர் மீது மோதியது. ரயில் மோதியதில் தண்டவாளத்தில் இருந்த டயர் துக்கி வீசப்பட்டது. ஆனால், ரயிலின் என்ஜினில் கீழ்பக்கம் ரயில்பெட்டிகளுக்கு செல்லும் சில மின்சார வயர்களும் டயர் மோதியதில் அறுந்தன.
இதனால், ரயிலின் 4 பெட்டிகளுக்கு மின்சாரம் தடைபட்டது. நள்ளிரவில் திடீரென மின்சாரம் தடைபட்டதால் தூங்கி கொண்டு இருந்த பயணிகள் திடுக்கிட்டு எழுந்தனர். இதனிடையே உடனடியாக ரயிலை நிறுத்திய அதிகாரிகள், அறுந்த மின்சார வயர்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு மின்சார வயர்கள் சரி செய்யப்பட்டது. இதையடுத்து 20 நிமிடங்கள் தாமதாக ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். ரயில் தண்டவாளத்தின் குறுக்கே டயர் வைக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த ரயில்வே போலீசார், டயரை கைப்பற்றினர். தண்டவாளத்தில் டயர் வைத்த மர்ம நபர்கள் யார்? எதற்காக டயரை வைத்தனர்? ஏதேனும் விபத்தை ஏற்படுத்தும் திட்டத்துடன் டயரை வைத்தனரா? என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.