நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், 5 கட்சிகள் இக்கூட்டத்தை புறக்கணித்துள்ளன.
முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மொத்தம் 58 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இக்கூட்டத்தில் 53 கட்சிகள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். அந்த வகையில், அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கறிஞர் இன்பதுரை, காங்கிரஸ் தரப்பில் செல்வபெருந்தகை, பாமக தரப்பில் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், மதிமுக சார்பில் வைகோ, மநீம தரப்பில் கமல்ஹாசன், தவெக தரப்பில் பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், ”தொகுதி மறுசீரமைப்பு என்னும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அதிகமாக பாதிக்கும். இதனால், மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு நடக்கும்பட்சத்தில், தமிழ்நாடு 8 நாடாளுமன்றத் தொகுதிகளை இழக்க நேரிடும். இது தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கே அபாயகரமான செயலாக பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதேபோல், தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிப்பு வெளியிட வேண்டும். இதுதொடர்பான போராட்டத்தை முன்னெடுக்க எம்பி-க்களை கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்க இந்த கூட்டம் தீர்மானிக்கிறது என்ற்று கூறி தீர்மானத்தை முதல்வர் முக.ஸ்டாலின் முன்மொழிந்தார். இதையடுத்து, அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட கட்சி தலைவர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் பாஜக, நாம் தமிழர் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் கட்சிகள் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்திருந்தனர். அதேபோல், தற்போது ஏசி சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சியும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதில், நாம் தமிழர் கட்சியை தவிர மற்ற 3 கட்சிகளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.