ஜாபர் சாதிக் வழக்கில் திமுகவை தொடர்பு படுத்துபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடருவோம் என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தமாக நீக்கப்பட்டார். இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, தங்கள் அலுவலகத்தில் பிப்ரவரி 26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார், கடந்த 23-ம் தேதி ஜாபர் சாதிக்கிற்கு சம்மன் அனுப்பினர்.
ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவரையும், அவரது கூட்டாளிகளையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை போதை பொருள் தடுத்த பிரிவு அதிகாரிகள் ஏழு நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து சென்னை கொண்டு வந்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்திருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அரசியலில் முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வாக்கு மூலம் கொடுத்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் திமுகவை தொடர்பு படுத்தி பேசி வருகின்றனர். தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாகி விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. வில்சன்; ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக ஆதாரம் இல்லாமல் திமுகவை குற்றம் சாட்டுபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடருவோம் என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார்.