வடதமிழக பகுதிகளின் மேல் நிலவக்கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த ஒரு சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு பரவலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த முன் அறிவிப்பின் அடிப்படையில், இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வாயிலாக கொடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கையின் அடிப்படையில், வடதமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்க்ளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழகத்தின் மேல் நிலவக்கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரக்கூடிய 4 நாட்களுக்கு பரவலாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், ஆகிய பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாகவும், ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.