டெல்லியில் தனது காதலியை 35 துண்டுகளாக வெட்டிய சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், மற்றொரு சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தில் உள்ள இஷாக் பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் பிரன்ஸ். இவர் ஆராதனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் சூழ்நிலை காரணமாகவோ, பெற்றோர் வற்புறுத்தல் காரணமாகவோ அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால், ஆராதனா மீது பிரன்ஸ் கடும் கோபத்தில் இருந்தார். அவரை சமாதானப்படுத்தும் வகையில் ஆராதனா பிரின்சுடன் உறவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் பெற்றோர், உறவினர் சர்வேஷ் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் ஆராதனாவை கொல்ல திட்டமிட்டுக் கொண்டிருந்தார். அதன்படி நவம்பர் 9ஆம் தேதி, ஆராதனாவை பிரின்ஸ் தனது பைக்கில் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். ஏற்கனவே தயாராக இருந்த சர்வேஷின் உதவியுடன் ஆராதனாவை கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அங்கு கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
இருவரும் இணைந்து அவரது உடலை 6 பகுதிகளாக வெட்டி பாலித்தீன் பைகளில் அடைத்தனர். பிறகு அருகில் இருந்த கிணற்றில் சில பாகங்களையும் தூரத்தில் உள்ள குளத்தில் அவரது தலையையும் வீசியுள்ளனர். நவம்பர் 15ஆம் தேதி கிணற்றில் சில உடல் உறுப்புக்கள் மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த உடல் பாகங்களை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து, நவம்பர் 20ஆம் தேதி பிரின்ஸ் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஆயுதம், நாட்டு கைத்துப்பாக்கி, தோட்டா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
வெட்டப்பட்ட உடல் பாகங்களை எடுப்பதற்காக பிரின்ஸை சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது, மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை கொண்டு காவல்துறையை நோக்கி பிரின்ஸ் சுடத் தொடங்கினார். போலீசாரும் திரும்பி சுட்டதில் பிரின்ஸ் படுகாயம் அடைந்தார். அவருடன் இந்த கொலை சம்பவத்தில் உதவியாக இருந்த சர்வேஷ், பிரமிளா யாதவ், சுமன், ராஜாராம், கலாவதி, மஞ்சு, ஷீலா என அனைவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் தனிப்படை அமைத்து தேடப்பட்டு வருகின்றனர். டெல்லி சம்பவத்தை தொடர்ந்து இதே போன்ற சம்பவங்கள் தொடர்வது மக்கள் மனதில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.