செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்றிரவு இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையின் குடிநீர் ஆதாரத்திற்கு முக்கிய ஏரியாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர், அடையாறு ஆற்றில் கலந்து கடலை அடைவது வழக்கம்.
இந்நிலையில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் நேற்றிரவு முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 22 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்போது தண்ணீரின் அளவு 3.200 டிஎம்சி ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 500 கன அடியாக உள்ளது.
ஏரியின் நீர் மட்டத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஏரியில் இருந்து குடிநீருக்காக வெளியேற்றப்படும் அளவு விநாடிக்கு 108 கன அடியாக உள்ளது. கனமழை தொடர்ந்து நீடித்து வருவதால் ஏரிக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து வருகிறது. விரைவில் ஏரி நிரம்பும் பட்சத்தில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்.