விமான டிக்கெட்டின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர் விடுமுறை வந்துவிட்டால், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் வேலை செய்பவர்கள் உடனே தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து செல்வது வழக்கம். குறிப்பாக, சென்னையில் வேலை பார்க்கும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள், தங்களது ஊர்களுக்கு விடுமுறையை கழிக்க விரும்புவார்கள். இதன் காரணமாக பேருந்து, ரயில் மட்டுமின்றி விமான டிக்கெட்டுகளின் விலையும் தாறுமாறாக உயரும்.
அதுவும் பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர் புகார் எழுந்து வருகிறது. மேலும், விமான நிறுவனங்கள் மீதுமே அடிக்கடி இந்த குற்றச்சாட்டு எழுந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், தற்போது விமானங்களின் டிக்கெட்டுகளின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது.
இதனால், சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக சிறப்புப் பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறையை பயன்படுத்தி விமானங்களின் டிக்கெட் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வழக்கமாக ரூ.3 ஆயிரத்திற்கு விமான டிக்கெட் விற்பனை செய்யப்படும். ஆனால், தற்போது ரூ. 10,000-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விமான பயணிகள் டிக்கெட் விலையை குறைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.