வார இறுதி நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விடுறையை தொடர்ந்து 2 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் 16, 17 மற்றும் சுபமுகூர்த்த நாட்களை தொடர்ந்து, 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கும் சென்று வருவார்கள்.
இதனால் வெளி ஊர்களுக்கு செல்லும் பயணிகள், தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப முன்பதிவு செய்து பயணிக்கலாம். எனவே, வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமை வரை பயணிகள் அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து நாளை பயணம் மேற்கொள்ள 19,268 பயணிகளும், 16ஆம் தேதி 11,471 பயணிகளும் மற்றும் 17ஆம் தேதி 7,773 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு நாளை தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 650 பேருந்துகளும், நாளை மறுநாள் 200 பேருந்துகளும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து 400 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,250 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.