பிப்ரவரி 14ஆம் தேதி காவல் நிலையத்தில் சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பெரியார் குறித்து சர்ச்சைக்குள்ளான கருத்துகளை தெரிவித்து வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திராவிட இயக்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. திராவிடர் கழகம், பெரியாரிய இயக்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சீமானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இந்த விவகாரத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அதேபோல், சீமானுக்கு எதிராக பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டு, வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சீமான் மீது காவல்துறையும் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது. அதன்படி, அவர் வரும் வெள்ளிக்கிழமை வடலூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திராவிடர் கழகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் இன்று நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்திற்கு சென்று சம்மனை வழங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, அவர் காவல்துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.