சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாருக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. அதி-விரைவு ரயில் என்பதால் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த கோரமண்டல் ரயில் நேற்று மாலை ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது, இரவு 7.30 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே வந்தபோது, பெங்களூருவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்த தண்டவாளத்தின் பாதையில் பெட்டிகள் விழுந்துள்ளது.
அந்த விழுந்து கிடந்த பெட்டிகள் மீது கோரமண்டல் ரயில் மோதி பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த 2 பயணிகள் ரயிலுடன், மூன்றாவதாக சரக்கு ரயில் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய ரெயில்களின் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. அவை ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்து உள்ளன.

விபத்து நடந்த இடத்தில் விடிய, விடிய மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்து வருகிறது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் இதுவரை 233 பேர் பலியாகியுள்ளதாக, ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ தாண்டியதாக கூறப்படுகிறது.

மேலும் ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரத்தம் வழங்க பாலசோர் மருத்துவமனையில் மக்கள் படை சூழ்ந்துள்ளது. நீண்ட வரிசையில் காத்திருந்து ரத்தம் வழங்கி உதவி செய்து வருகின்றனர். மேலும் இந்த ஒடிசா ரயில் விபத்து காரணமாக 38 ரயில்கள் ரத்துசெய்யப்படுகிறது, மேலும் 35 ரயில்கள் மாற்று பாதையில் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.