கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை பெற்ற சுமார் 350 சுகாதாரப் பணியாளர்களின் நோய் எதிர்ப்பு நிலையை கணக்கிட, கர்நாடகாவில் உள்ள Sri Jayadeva Institute of Cardiovascular Sciences and Research சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது.
இந்த ஆய்வில் பங்கேற்ற சுகாதாரப் பணியாளர்கள், ஒரு வருடத்திற்கு முன் கோவிட்-19 ப்ரிகாஷன் டோஸை (கோவிஷீல்ட் பூஸ்டர் டோஸ்) எடுத்து கொண்டவர்கள். இந்த தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் பெற்ற இவர்கள் அனைவருக்கும் நியூட்ரலைசிங் ஆன்டிபாடிகள் (neutralising antibodies) கணிசமாக இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 99.4% பேருக்கு SARS-CoV-2க்கு எதிரான நியூட்ரலைசிங் ஆன்டிபாடிஸ் போதுமான அளவில் இருப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. இந்த ஆய்வில் 19 – 60 வயதுக்கு இடையில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார தொழில்நுட்ப வல்லுநர்கள், வார்டு உதவியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உட்பட ஜெயதேவா இன்ஸ்டிடியூட்டின் ஊழியர்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் கடந்த ஜனவரி 2022ஆம் ஆண்டு கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2 டோஸ் + இதே தடுப்பூசியின் பூஸ்டர் ஷாட்டை எடுத்திருந்தனர். எனினும், இதில் 42% பேர் இதற்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 350 ஊழியர்களில், சுமார் 348 பேர் போதுமான நியூட்ரலைசிங் ஆன்டிபாடிகளை கொண்டிருந்தனர். இந்த 348 பேரில் 97%-க்கும் அதிகமானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. இந்த ஆய்வு தொடர்பாக இன்ஸ்ட்டியூட்டின் இயக்குநர் சி.என்.மஞ்சுநாத் பேசுகையில், ”நியூட்ரலைசிங் ஆன்டிபாடிகள் இருப்பு, பூஸ்டர் டோஸ் போட்டு கொண்ட சுமார் 12 மாதங்களுக்கு பிறகும் குறையாமல் கணிசமான அளவு தொடர்ந்து இருக்கிறது. இரண்டாவது பூஸ்டர் ஷாட் கட்டாயம் போட்டு கொள்ள வேண்டுமா? தடுப்பூசியின் நான்காவது டோஸ் போட்டு கொள்ள வேண்டுமா? உள்ளிட்ட கேள்விகள் பொதுமக்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது. இந்நிலையில் 4-ஆவது டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ள தேவையில்லை என்பதை எங்களது இந்த ஆய்வு ஆதரிக்கிறது. மேலும், பூஸ்டர் டோஸ் எடுக்காதவர்கள் தாமதிக்காமல் உடனே எடுத்து கொள்ள வேண்டும். 12 மாதங்களுக்கு பிறகும் பூஸ்டர் டோஸால் உருவான நோய் எதிர்ப்பு சக்தி நீடித்து வருவது உண்மையில் மகிழ்ச்சியானது” என்றார்.