கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது மக்கள் மத்தியில் சற்று பீதியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு போடப்படுமோ என்கிற பயமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு சற்று ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயம் என அண்மையில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, மக்கள் அதிகம் கூடும் இடமான சினிமா தியேட்டர்களில் மக்கள் மாஸ்க் அணிவது அவசியம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறுகையில், ”தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மிதமாகவே உள்ளதால் அதிரடி கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்க வேண்டிய அவசியமில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிவதை மட்டும் கட்டாயமாக்கி வருகிறோம். முதலில் மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தற்போது தியேட்டர்கள், ஏசி வசதி உள்ள அரங்குகள், கலையரங்கம் ஆகியவற்றில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார்.