தமிழகத்தில் தினசரி 11,000 கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது..
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000,2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 4000-ஐ கடந்துள்ளது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது… தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அரசு மருத்துவமனைக்கு வருவோர் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..
இந்நிலையில், தமிழகத்தில் தினசரி 11,000 கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கடிதம் எழுதி உள்ளார். அதில், “நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பிப்ரவரி மதத்தில் 50க்கு குறைவாக இருந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை மார்ச் மாத இறுதியில் 689 ஆக உயர்ந்தது.
இதேபோல் தொற்று பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்படுவோர் சதவீதமும் 0.6 இருந்து 3 ஆக உயர்ந்துள்ளது. பல மாவட்டங்களில் கொரோனா உறுதி செய்யப்படுவோர் சதவீதமும் 5க்கு அதிகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர், கோவை, காஞ்சிபுரம், கரூர், ஈரோடு, தூத்துக்குடி, சென்னை, போன்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 3000 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை 11,000ஆக உயர்த்த வேண்டும் வேண்டும். மாவட்டம் தோறும் மக்கள் தொகை ஏற்ப பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்..