இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. அதில், கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் 5 அம்ச தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களோடு சேர்த்து தற்போது 608 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல மாதங்கள் கழித்து இன்று 100 பேருக்கு மேல் எண்ணிக்கை பதிவாகும் என அஞ்சப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்று மாநில அரசுகளுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.