வந்தவாசியில் நடைபெற்ற யாத்திரையின்போது பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் அரசியல் மாற்றம் வர வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். குடும்ப அரசியல், சாதி அரசியல், ஊழல் மற்றும் அடாவடியை மையப்படுத்தி 70 ஆண்டுகளாக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நான்கும் மக்களுக்கு பிடிக்கவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் 5 ஆண்டுகளில் மூன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 31 மாதங்களாக 10,400 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மக்களின் வளர்ச்சிக்காக இல்லாமல், குடும்பத்தின் வளர்ச்சிக்காக மட்டும் அரசு உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் நிருபித்து வருகிறார். அவரது மகன், மருமகன், அமைச்சர்களின் வளர்ச்சிக்காக மட்டும் ஆட்சி நடத்தப்படுகிறது. கொடுமையான வாழ்க்கையுடன் விவசாயிகள் வாழ்கின்றனர். செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் திட்டத்துக்கு மூன்று போகம் விளையக்கூடிய நிலங்களை கொடுக்க மறுத்த விவசாயிகளை திமுக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்தது. களத்தில் பாஜக இறங்க தயாரானதும் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டன. இந்தியாவில் விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை பதிவு செய்து கைது செய்தது திமுக அரசு மட்டும்தான். ஊழல் மலிந்த திமுக ஆட்சிக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அமைய உள்ளன.