தேர்தல் வரும் போதெல்லாம் விவிபேட் என்ற வார்த்தை கேள்விப்படுவோம். ஆனால், வாக்கு எண்ணிக்கையின் போதும் அவை முக்கிய பங்கு வகிக்கிறது. அதென்ன விவிபேட் இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கையில் அது எந்தளவுக்கு முக்கியமானது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
இன்று மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதில் பாஜகவுக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் சமயத்தில் விவிபேட் இயந்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், வாக்கு எண்ணிக்கையின் போதும் அவை முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.
விவிபேட் என்றால் என்ன? Voter Verifiable Paper Audit Trail என்பதன் சுருக்கமே விவிபேட் என்பதாகும். இவை பொதுவாக வாக்குப்பதிவு இயந்திரங்களின் இணைக்கப்பட்டிருக்கும். தான் வாக்களிக்கும் நபருக்கே வாக்குப் பதிவு செய்யப்படுகிறது என்பதை வாக்காளர் உறுதி செய்து கொள்ள இது பயன்படுகிறது. நாம் வாக்களித்த உடன் அது குறித்த தகவல்கள் விவிபேட் இயந்திரத்தில் இருக்கும் ஸ்லிப்பில் தெரியும். அதில் வேட்பாளரின் வரிசை எண், பெயர் மற்றும் கட்சியின் சின்னம் இருக்கும். வாக்காளர் அதைச் சரி பார்க்க 7 வினாடிகள் வழங்கப்படுகிறது. பிறகு அந்த ஸிலிப் அங்குள்ள பெட்டியில் விழுவது போல செட் செய்யப்பட்டிருக்கும்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது பலரும் அது குறித்து சந்தேகம் எழுப்பிய நிலையில், தேர்தல் ஆணையம் முதலில் கடந்த 2010ஆம் ஆண்டு விவிபேட் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து ஜூலை 2011இல் லடாக், திருவனந்தபுரம், சிரபுஞ்சி, கிழக்கு டெல்லி மற்றும் ஜெய்சால்மர் ஆகிய இடங்களில் இவை டெஸ்ட் செய்யப்பட்டன. அதன் பிறகு சில மாறுதல்கள் செய்யப்பட்டு 2013இல் நாகாலாந்தில் உள்ள நோக்சன் சட்டமன்றத் தொகுதியில் இது முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. அங்கு மொத்தம் 21 வாக்குச் சாவடிகளில் இருந்த நிலையில், அனைத்திலும் இது பயன்படுத்தப்பட்டது. பிறகு படிப்படியாக விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், ஜூன் 2017இல், தேர்தல்கள் போது 100% இவை பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது.
இந்த விவிபேட் VVPAT ஸ்லிப்பை எந்தவொரு வாக்காளரும் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாது. அவை அந்த பெட்டியிலேயே விழுந்துவிடும். தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை அடக்கும் போது அவை சரிபார்க்கப்படும். அதற்காக அனைத்து தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவாகும் வாக்குகளும் சரிபார்க்கப்படும் என்று இல்லை. ஒரு சட்டசபை தொகுதியில் உள்ள 5 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகள் இதுபோல சரி பார்க்கப்படும். அதாவது வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்தக் கட்சிக்கு எத்தனை வாக்குகள் விழுந்துள்ளன என்பது எண்ணப்படும்.
பிறகு விவிபேட் ஸ்லிப்கள் எண்ணப்பட்டு முடிவுகள் சரி பார்க்கப்படும். முதலில் ஒரு வாக்குச்சாவடியில் மட்டுமே இதுபோல சரிபார்த்து வந்தனர். கடந்த 2019ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இது 5 வாக்குச் சாவடிகளாக உயர்த்தப்பட்டன. இந்த 5 வாக்குச் சாவடிகளும் ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்படும். வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியால் குலுக்கல் முறையில் இந்த 5 வாக்குச்சாவடிகள் தேர்வு செய்யப்படும். அதன்படியே இன்றும் வாக்கு எண்ணிக்கையின் போது 5 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகள் விவிபேட் இயந்திரங்களுடன் சரிபார்க்கப்படும்.
Read More : Elections Story: ‘1952 முதல் 2019 வரை..’ அரசியலில் இருந்து விலகிய பி.வி.நரசிம்மராவ் பிரதமர் ஆனது எப்படி?