அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து டொனால்ட் டிரம்ப் இஷ்டத்திற்கு உலக நாடுகள் மீது வரிகளை விதித்து வருகிறார். சீனா மீது அதிகபட்சமாக 245% வரியை விதித்தார் என்றே முதலில் செய்திகள் வெளியானது. ஆனால், டிரம்ப் நிர்வாகம் இப்போது 100, 200 சதவீதத்தை தாண்டி சில பொருட்களுக்கு 3,521% வரை வரிகளை விதித்துள்ளார். அதன்படி, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலர் மின் உற்பத்திப் பொருட்களுக்கு 3,521% சதவீதம் வரை புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.
கம்போடியா, தாய்லாந்து, மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்க வர்த்தகத் துறை புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு அமெரிக்க சோலார் பேனல் உற்பத்தியாளர்கள் சீன நிறுவனங்கள் மானிய விலையில், மலிவான பொருட்களை சந்தைக்குள் நிரப்புவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, விசாரணை தொடங்கியதைத் தொடர்ந்து இந்த வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்போடியாவின் தயாரிப்புகள் அமெரிக்க விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அதன் நிறுவனங்கள் 3,521% அதிகபட்ச வரிகளை எதிர்கொள்ளும் என்றும் சீன உற்பத்தியாளர் ஜின்கோ சோலார் மலேசியாவில் தயாரித்த பொருட்கள் 41% க்கும் அதிகமான வரிகளை எதிர்கொள்ளும் என்றும் தாய்லாந்தின் டிரினா சோலாரின் தயாரிப்புகள் 375% வரிகளை எதிர்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் கட்டணங்கள் குறித்து இறுதி முடிவை எடுக்க, ஒரு தனி அமெரிக்க அரசு நிறுவனமான சர்வதேச வர்த்தக ஆணையம் திட்டமிட்டுள்ளது.