கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை அடுத்த ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியண்ணன். இவர், அக்னிபாத் இராணுவ வீரராக மத்தியப்பிரதேசத்தில் பணியாற்றி வரும் நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு வடமலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்துள்ளனர்.
பின்னர், செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், பிப்ரவரி 28ஆம் தேதியன்று 15 நாட்கள் அவசர விடுமுறை வாங்கி, சொந்த ஊருக்கு வந்த பெரியண்ணன், தனது காதலியை அவருடனே அழைத்துச் சென்றார். பின்னர், ஏலகிரி கோவிலில் திருமணத்தை முடித்துக் கொண்டு தேனிலவு கொண்டாட ஊட்டிக்கு சென்றுள்ளனர்.
பின்னர், பெரியண்ணன் தனது காதல் மனைவியை சொந்த ஊர் அழைத்து வந்துள்ளார். பெண்ணின் கழுத்தில் தாலியை கண்டதும் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர், தனது மனைவியிடம் நீ உனது வீட்டில் இரு. அடுத்த விடுமுறைக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு மீண்டும் பணிக்கு சென்றுள்ளார். மேலும், அவர் கட்டிய தாலியை திரும்ப வாங்கிவிட்டு, அவரை வீட்டருகே விட்டுச் சென்றுள்ளார்.
இதனை கவனித்த பெண்ணின் உறவினர்கள் பெரியண்ணனை சுற்றிவளைத்தனர். பின்னர், பர்கூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, பெண் வீட்டார் கொடுத்த புகாரில் பாலியல் வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பெரியண்ணனை எச்சரித்துள்ளனர். இதையடுத்து, தகவல் அறிந்ததும் பெரியண்ணனின் குடும்பத்தார் காவல்நிலையத்திற்கு வந்தனர். இதையடுத்து, மீண்டும் இருதரப்பு பெற்றோர் முன்பு தாலி கட்டப்பட்டு, அடுத்த விடுமுறைக்கு வரவேற்பு நிகழ்ச்சி வைத்துக்கொள்ளலாம் என பேசி முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பெண் குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.