மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கு ஷோபனா என்ற மனைவியும், பூபதி என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகன் பூபதியின் 8வது பிறந்த நாளினை முன்னிட்டு, மயிலாடுதுறை பட்டமங்கலம் தெருவில் உள்ள பிரபல பேக்கரியில் (ஐயங்கார்) ரெட் மில்ஸ் பிரஷ் கேக்கை வாங்கியுள்ளார். மாலை ஆறு மணி அளவில் கேக்கை வாங்கிய பாலமுருகன், 7.30 மணி அளவில் வீட்டிற்கு சென்று பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.
இந்நிலையில், கேக் வெட்டி குழந்தைகளுக்கு கொடுத்த போது அதில் புழுக்கள் நெழிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன், உடனடியாக தொலைபேசியில் பேக்கரியில் புகார் தெரிவித்துள்ளார். அப்போது பேக்கரியில் உள்ளவர்கள், நாளை கடைக்கு நேரில் வருமாறு கூறியுள்ளனர். பின்னர் பாலமுருகன் மற்றும் அவரது மனைவி மறுநாள் பேக்கரிக்கு சென்று இது குறித்து முறையிட்டுள்ளனர். அப்போது கேக்கிற்கான தொகையை திருப்பி அளிப்பதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பேக்கரியின் தரப்பில் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் திருவிளையாட்டம் பகுதியில் அரசு நிகழ்ச்சிக்காக வந்திருந்த மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலையிடம் இச்சம்பவம் குறித்து வீடியோ ஆதாரத்துடன் புகார் மனு அளித்தனர். இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்போது உறுதி அளித்தார்.