யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர், கடந்த மாதம் 17ஆம் தேதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் உயர்ரக பைக்கில் சென்று சாகசம் செய்ய முயன்று விபத்து ஏற்பட்டு காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு சென்ற நிலையில், காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் டிடிஎப் வாசன். அந்த ஜாமீன் மனுவும் தள்ளுபடியானது. விபத்தில் காயமடைந்துள்ளதால், சிறையில் உரிய சிகிச்சை பெற முடியவில்லை எனவும், புண்கள் மோசமாகி வருவதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும். அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், யூடியூப் தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடும்படி நீதிபதி கூறியிருந்தார்.
இதற்கிடையே, இன்று டிடிஎப் வாசனின் நீதிமன்றக் காவல் முடிவடைகிறது. அவர் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அவரது நீதிமன்ற காவலை நீட்டிப்பது குறித்து நீதிபதி உத்தரவிடுவார். ஜாமீன் மனு மூன்று முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி டிடிஎப் வாசன் மனு தாக்கல் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.