சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த சிறுமியை தெருவில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று முட்டியது. இதில் சிறுமி படுகாயம் அடைந்த நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாக பரவியது. இதையடுத்து தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து உரிமையாளர்களின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட திருவல்லிக்கேணியில் முதியவரை மாடு முட்டிய இடத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலையில் சுற்றித்திரிந்த 2 மாடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டியை உடனடியாக பறிமுதல் செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அந்த மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டன.
இந்நிலையில், சென்னையில் சாலைகள், தெருக்களில் மக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகள் சுற்றித் திரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து, மாநகர காவல்துறையும் நடவடிக்கை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.