2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழக முற்படை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி வட மாநிலங்களில் வலுவானதாக இருந்தாலும் தமிழ்நாட்டில் மூன்றாவது அணியாக கூட பார்க்கப்படுவதில்லை. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில் தமிழக பாஜகவை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் தமிழகம் வந்த பிரதமர் மோடி கோவை பாஜக ஏற்பாடு செய்திருந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார். விமான நிலையம் வந்தடைந்த அவர் சாய்பாபா கோவிலில் இருந்து 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு காரில் அணிவகுத்து சென்றார். அப்போது அங்கிருந்த பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கையசைத்து பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இந்த நிகழ்வின் போது பள்ளி குழந்தைகளும் சாலைகளின் இருபுறங்களில் இருந்தும் பிரதமர் மோடிக்கு கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தொண்டர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. குழந்தைகள் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோரை எந்தவிதமான தேர்தல் பரப்புரைகளிலும் ஈடுபடுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட ரோட் ஷோ நிகழ்ச்சியில் ஆறாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொள்ள வைக்கப்பட்டுள்ளனர். எனவே தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக பிரதமர் மோடி மற்றும் பாஜக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி தனது புகாரில் தெரிவித்துள்ளது. மேலும் பிரதமர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் அரசு உதவி பெறும் பள்ளியான ஸ்ரீ சாய் பாபா வித்யாலயா பள்ளியை சேர்ந்த மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.