இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்.5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணையும் கடந்த மாதம் வெளியானது. இதில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி அக்.15ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கிறது. ஆனால், நவராத்திரி தொடக்க விழா காரணமாக ஒருநாள் முன்னதாக போட்டியை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தன.
இந்நிலையில், நேற்று உலக கோப்பை தொடர் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் ஜெய்ஷா கூறுகையில், உலகக் கோப்பை போட்டி தேதிகளை மாற்ற சில மாநில கிரிக்கெட் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. ஆனால், இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படாது. அட்டவணையில் சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும். அதுவும் தேதியில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்படுமே தவிர, போட்டி நடக்கும் மைதானங்களில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை” என்றார்.
மேலும், ”பும்ரா தற்போது உடல் தகுதியுடன் இருப்பதால் அயர்லாந்துக்கு எதிரான டி20 விளையாட வாய்ப்பு உள்ளது. உலகக் கோப்பை தொடரின் போது ரசிகர்களுக்கு இலவச குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உலகக் கோப்பை டிக்கெட்டுகள் குறித்த அறிவிப்பு விரைவில் பிசிசிஐ மற்றும் ஐசிசியால் கூட்டாக வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.