உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி கோப்பை ஏதும் வெல்லாத நிலையில், இந்த முறை கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் மோதுகின்றன. இவற்றில் 5 நாடுகள் ஆசியாவை சேர்ந்தவை. இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் அனைத்து கிரிக்கெட் சங்கங்களிடம் இருந்தும் டிக்கெட் விலை நிர்ணயம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் டிக்கெட் விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
அதேநேரம் சில போட்டிகள் மாற்றியமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் மாற்றியமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஐசிசியிடம் பிசிசிஐ அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். போட்டிக்கான தேதிகள், நேரங்கள் மட்டுமே மாற்றியமைக்கப்படலாம் என்றும் மைதானங்கள் மாற்றப்படாது எனவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.