பொதுவாகவே முருகன் கோவில்கள் மலை மீது தான் அதிகம் இருக்கும். ஆனால், எங்குமே காண முடியாத அதிசயமாக வருடத்தின் பாதி நாட்கள் நீருக்குள் மூழ்கி இருக்கும் முருகன் கோவில் ஒன்று நம்முடைய தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. அது எங்கே என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள புகழ் பெற்ற குறுக்குத்துறை முருகன் கோயில் ஆற்றில் வெள்ளம் வரும்போதெல்லாம் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். வெள்ளப்பெருக்கு வடிந்ததும் மீண்டும் பொலிவோடு காட்சிதரும். இந்த கோவில் நீரில் மூழ்கி இருப்பது மட்டும்மல்ல இக்கோவிலை பற்றிய பல தகவல்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
அதாவது திருச்செந்தூர் மூலவர் திருமேனியே இங்குள்ள கல்லால் தான் செதுக்கப்பட்டது என கூறப்படுகிறது. அதனால் திருச்செந்தூர் முருகனுக்கு இணையான இந்த கோவிலை கருதுகின்றனர். பல ஆண்டுகளாக பல வெள்ளப் பெருக்கை கண்ட இக்கோவில் இதுவரை எந்த சேதமும் ஏற்படாமல் கம்பீரமாக ஆற்றுக் நடுவே காட்சி தருகிறது.
இங்குள்ள மூலவரும் திருச்செந்தூர் மூலவரை போலவே கையில் பூ, ஜப மாலையுடன் காட்சி தருகிறது. திருச்செந்தூர் முருகன் சிலையை செய்த சிற்பி, ஒருநாள், வள்ளி-தெய்வானையுடன் இருக்கும் முருகன் சிலையை செய்ய ஆசைப்பட்டு, அதே போல் ஒரு சிலையை ஆற்றிற்கு நடுவே வடித்துள்ளார். நாளடைவில் ஆற்றுக்கு வரும் மக்கள் இதை வழிபட தொடங்கியதோடு, திருப்பணி செய்து கோவிலும் எழுப்பியுள்ளனர். ஆற்று வெள்ளத்தை கிழித்து சிதறச் செய்யும் வகையில் இக்கோவிலின் மேற்பகுதி படகின் அடி பாகத்தை போன்றே அமைக்கப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில், தாமிரபரணியில் வெள்ளம் ஏற்படும் காலங்களிலும் இந்த கோவில் நீருக்குள் மூழ்கிய நிலையிலேயே இருக்கும். இந்த கோவிலில் நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கும் சன்னதி இருக்கிறது. ஆகையால், நெல்லையப்பர் கோவில் திருவிழாவின் போது இக்கோவில் முருகப் பெருமான் நெல்லையப்பன் கோவிலுக்கு எழுந்தருள்வார். திருச்செந்தூர் கோவிலுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இந்த குறுக்குத்துறை முருகன் கோவில் செவ்வாய் தோஷம் போக்கும் கோவிலாக உள்ளது. திருச்செந்தூர் திருத்தலத்திற்கு இணையான கோவிலாக கருதப்படும் இக்கோவில் பலவிதமான சிறப்புக்களை பெற்ற கோவிலாகும்.
Read more : வாஸ்து டிப்ஸ் : வீட்டில் குபேரர் சிலையை இந்த திசையில் வைத்தால் செல்வம் பெருகும்..!!