Sudan: சூடானின் டார்பர் நகரமான எல்-ஃபாஷர் மற்றும் அருகிலுள்ள இரண்டு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களின் முகாம்கள் மீது துணை ராணுவப் படையினர் நடத்திய தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
2023 ஏப்ரலில் இருந்து சூடான் இராணுவத்துடன் கடுமையான போரில் ஈடுபட்டு வரும் RSF படை, கடந்த வெள்ளிக்கிழமை ஏல்-ஃபாஷர் நகரையும், அகதிகளுக்கான ஜம்சம் மற்றும் அபூஷூக் முகாம்களையும் இலக்காகக் கொண்டு திட்டமிட்டு தொடர் தாக்குதல் நடத்தியதாக ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது.
அகதிகளும் புலம்பெயர்ந்தவர்களும் சார்ந்த பொதுக் கூட்டமைப்பு (General Coordination of Displaced Persons and Refugees) வெளியிட்ட தகவலில், முதல் கட்ட தாக்குதல் கடந்த வியாழக்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை தொடர்ந்து இடம்பெற்றதாகவும், இது பொதுமக்கள் வசிக்கும் வீடுகள், சந்தைகள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட குடியிருப்பு உட்பட சிவில் கட்டமைப்புகளை முற்றிலும் அழித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்கிய நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும், இந்த தாக்குதலை அவர்கள் “போர் குற்றமும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றமும்” எனக் கண்டித்து வலியுறுத்தினர்.
RSF மறுப்பு: இதற்கிடையில், ஜம்சம் முகாமில் இடம்பெற்றதாக கூறப்படும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை, குறிப்பாக அந்த இடத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக, ரேபிட் சப்போர்ட் ஃபோர்சஸ் (RSF) முற்றிலும் மறுத்தது. சனிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில், பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று ஒரு வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், அது சுடான் இராணுவத்தால் திட்டமிட்டு காட்சிப்படுத்தப்பட்டது என்றும், RSF மீது பழி போடுவதற்காக உருவாக்கப்பட்ட பொய்யான காணொளி என்றும் அந்தக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், தங்களின் இராணுவ எதிரிகளே, நடிகர்களை வைத்து தாக்குதல் காட்சிகளையும் பயன்படுத்தி திட்டமிட்ட ஒரு பொய்ப் பிரச்சாரத்தை நடத்தி, RSF மீது பழி போட முயற்சி செய்து வருகின்றனர் என அந்தக் குழு குற்றம் சாட்டியது.
மேலும், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை (International Humanitarian Law) கடைபிடிக்கும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி, சூடான் மக்களுக்கெதிராக நடைபெற்று வரும் “உண்மையான குற்றச்செயல்களிலிருந்து” கவனத்தை திருப்ப, சூடான் இராணுவமே இவ்வாறு முயற்சி செய்கிறது என்று RSF குற்றம்சாட்டியுள்ளது.
சுடானில் 2023 ஏப்ரலில் இராணுவத்திற்கும் ரேபிட் சப்போர்ட் ஃபோர்சஸ் (RSF)-க்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் போராட்டத்தை தொடர்ந்து இடம்பெற்ற போரின் காரணமாக, நாட்டில் ஒரு ஜனநாயக மாற்றத்திற்கான நம்பிக்கைகள் முற்றிலும் நொறுக்கப்பட்டுவிட்டன. இந்த போர் மில்லியன் கணக்கான மக்களை அகதிகளாக மாற்றி, தார்பூர் போன்ற பிரதேசங்களை முழுமையாக அழித்து விட்டது. அதேசமயம், கார்த்தூமில் சூடான் இராணுவம் மீண்டும் தொடங்கிய தாக்குதல்களின் மத்தியில், RSF மீது அழுத்தம் மேலும் அதிகரித்து வருகிறது.
Readmore: இளம்பெண்ணின் மார்பகத்தை பிடித்த இளைஞர்!. வைரலாகும் வீடியோ!. பெங்களூரு மெட்ரோ நிலையத்தில் அசிங்கம்!.