தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். மேலும் ஏற்கனவே கமிட்டான படங்களை முடித்து விட்டு முழு நேர அரசியல்வாதியாக மாறப் போவதாகவும் விஜய் கூறியிருந்தார். அதன்படி, கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் தவெகவின் பிரம்மாண்ட மாநாட்டை விஜய் நடத்தினார். அந்த மாநாட்டில் தனது கட்சியின் கொள்கைகளையும் விஜய் அறிவித்தார். மத்திய மாநில அரசுகளை விமர்சித்தாலும், தமிழகத்தில் ஆளும் திமுக அரசை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, பனையூரில் விஜய்யை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவருக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் இணைந்தவுடனேயே இருவருக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.